jump to navigation

அப்பா… June 19, 2017

Posted by anubaviraja in நடந்தவை.
Tags: , , ,
trackback

12657353_1171948692830135_5029907606615636924_o
சம்பவம் 1 
சமையல் மாஸ்டர்: அண்ணாச்சி, இங்க பாருங்க இந்த கல்யாண சீட்டை உங்க கடைல தான் குடுக்க போறேன்.. எப்படியும் ஒரு ஐயாயிரம் ருபாய் வரும்.. நம்ம கமிஷன பாத்து செஞ்சிருங்க..
அப்பா: இல்லிங்க.. இந்த மாதிரி பழக்கம் நம்ம கடைல கெடயாது

சம்பவம் 2 
வியாபாரி: அந்த முக்கு கடைல ரவை பாக்கெட் இருபது ரூபாய் தான் விக்கிறாங்க நீங்க என்ன இருபத்தி ரெண்டு ரூவா சொல்றீங்க?
அப்பா: இல்லையே மொத்த விலையே 21 ரூபாய் அடக்கம் ஆகுதே?
வியாபாரி: அட எடையில கொஞ்சம் முன்னபின்ன இருக்கும் ..
அப்பா: அப்படி ஒரு வியாபாரம் கண்டிப்பா பண்ணனுமா என்ன?
சம்பவம் 3 
நண்பர்: மனோகரா உனக்கு தான் தொழில் நஷ்டம் ஆகிரிச்சில்ல.. வாங்கின பார்ட்டிக்கு எல்லாம் ஒரு 40-50% செட்டில் பண்ணி முடிச்சிர வேண்டியது தான..
அப்பா: அவங்க என்ன நம்பி கடன் குடுத்திருக்காங்க.. நஷ்டம் எனக்கு தான்.. அவங்க என் மேல வச்ச நம்பிக்கைல இல்ல .. கொஞ்சம் நாள் ஆனாலும் முழு பணத்தையும் செட்டில் பண்ணிருவேன் ..
சம்பவம் 4 
வாடிக்கையாளர்: என்னங்க, கடைய நீங்க பெருக்கி விடுறிங்க? வேலை பார்க்குற பசங்க கிட்ட சொன்னா செய்ய மாட்டாங்களா?
அப்பா: நாம இருக்குற இடத்தை நாம தான சுத்தமா வச்சுக்கணும்?
சம்பவம் 5 
தொழிலாளி: அண்ணாச்சி அந்த நயம் பாசி பருப்பு மூடைல ஒரு 2 கிலோ சாதா பருப்பு விழுந்திருச்சி.. கிண்டி விட்டுரலாமா?
அப்பா: இல்ல, அந்த நயம் பருப்பு மூடைல இருந்து ஒரு 5 கிலோ மேலாப்ல அள்ளி சாதால போட்டிரு..
சம்பவம் 6 
நான்: இந்த விருதுநகர் வசூல் நாளைக்கு பேங்க்ல போட முடியாது போல.. அடுத்த வாரம் சேர்த்து குடுத்துறலாமா?
அப்பா: நான் குடுக்கிறேன்னு சொல்லிட்டேன்.. அவரு அத வச்சி ஏதாவது வசூல் ஐடியா பண்ணிருப்பார்.. நம்ம சண்முககனி அண்ணாச்சி கடைல ஒரு ஆயிரம் ரூபாய் கைமாத்து வாங்கு.. அவருக்கு அப்புறமா குடுத்துக்கலாம்..
சம்பவம் 7 
நண்பர்: ஏனப்பா இதனை வருசமா வியாபாரம் பண்ற, ஒரு சொத்து சொகம், நகை நட்டு ஏதும் சேர்த்து வச்சிருக்கியா?
அப்பா: 4 தடவ தொழில்ல நஷ்டம் வந்தாலும், வேற  வேற தொழில் தொடங்க வேண்டியது வந்தாலும்.. இன்னும் இந்த மனோகரனை நம்பி சரக்கு அனுப்ப ஆள் இருக்காங்கல்ல, எங்க போய் கடை  வச்சாலும் தேடி வந்து சரக்கு வாங்க ஆள் வர்றங்கள்ல.. அது தான் என் சம்பாத்தியம் ..
சம்பவம் 8 
வாடிக்கையாளர்: இந்த பூண்டு என்ன விலை? காய்கறி வாங்க வந்தேன்.. அப்டியே ஒரு கால் கிலோ பூடு வாங்கிட்டு போயிறலாம்னு..
அப்பா: அட..வாங்க சங்கர்.. பார்த்து எவ்ளோ நாளாச்சு? அப்புறம் .. இந்த உடன்குடி கருப்பட்டி வந்துருக்கு பார்த்திங்களா? … <10 நிமிட உரையாடல்>
வாடிக்கையாளர்: மொத்த  பில் எவளோ அண்ணாச்சி?
அப்பா: 1257.50 சங்கர்..
சம்பவம் 9: 
அம்மா: அதான் உடம்பு சரி இல்லைல, ஒரு நாள் வீட்ல ரெஸ்ட் எடுத்தா என்ன?
அப்பா: அதெலாம் ஒன்னும் இல்ல.. மாத்திரை போட்ருக்கேன்ல கடைல போய்  உட்கார்ந்தா எல்லாம் சரி ஆயிரும்
சம்பவம் 10 
நண்பர்: ஏன்பா மனோகரா, இந்த நாட்டு பட்டாணி கிடைக்க மாட்டேங்குதே மார்க்கெட்ல?
<ஐந்து நிமிடம் கழித்து>
நண்பர்: உன்கிட்ட ஒரு விஷயம் சொன்னா உடனே முடிச்சிடறேய பா.. இது எவ்ளோ? அரை கிலோ பட்டாணியா?
1998 முதல் 2007 வரை என்னுடைய ஒவ்வொரு நாளையும், உங்களை பார்த்து பழகி, கற்றுகொண்டவை ஏராளம் அப்பா.. கடைசி வரை என்னிடம் நேரடியாக ஒரு அறிவுரை கூட சொன்னதில்லை நீங்கள்.. எல்லாம் உங்களை பார்த்து நான் கற்று கொண்டது..
நேர்மை, உண்மை, தொழில் பக்தி, நம்பிக்கையை காப்பாற்றுவது, இன்னும் எத்தனையோ என்னையும் அறியாமல் என் வேலையில் கலந்திருப்பது உங்கள் ஆளுமை..
இன்னும் எத்தனை வருடங்கள் ஆனாலும் உங்கள் நினைவுகளும்.. நீங்கள் கற்று தந்தவையும்.. என்னுடன்..

Comments»

1. Madhu - June 19, 2017

A beautiful father’s day tribute illustrating the elements of a strong work ethic that you observed in your dad!

anubaviraja - June 19, 2017

Thank you…


Leave a comment